கள்ளத் துப்பாக்கி வழக்கில் தொடர்புடைய இளைஞரை மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் தங்கியிருந்து கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட முயன்ற சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய காவலர் பரமேஸ்வரன்(32), அவரது உறவினரான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமார் மகன் நாகராஜ்(30), இடைத்தரகராக செயல்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவா(32) ஆகியோரை கடந்த மாதம் 27-ம் தேதி கன்டோன்மென்ட் போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சென்னை புழலைச் சேர்ந்த திவ்யபிரபாகரன்(40), திருநெல்வேலி வி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த எட்டப்பன்(43), சங்கரன்கோவிலைச் சேர்ந்த கலைசேகர்(29) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. 6 பேரிடமும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கள்ள துப்பாக்கிகளை வடமாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் கொள்முதல் செய்ய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் உதவியதாக எட்டப்பன் உள்ளிட்டோர் வாக்குமூலம் அளித்தனர்.
மத்திய பிரதேசத்தில் முகாம்
அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார், மத்திய பிரதேசம் மாநிலத்துக்குச் சென்று முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கள்ளத் துப்பாக்கி விற்பனையில் இடைத்தரகராக செயல்பட்ட சாகர் மாவட்டம் பினா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா முராரி திவாரி (30) என்பவரை மடக்கிப் பிடித்தனர். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட கிருஷ்ணா முராரி திவாரியை, ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். நீதிபதி ஷகிலா உத்தரவின்பேரில் கிருஷ்ணா முராரி திவாரியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு இவ்வழக்கில் முக்கியத் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, அவரை கைது செய்வதற்காக சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, சிபிசிஐடி போலீஸாரின் கஸ்டடி விசாரணைக்குப் பின் எட்டப்பன், கலைசேகர் ஆகியோர் நேற்று ஜே.எம்.6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.