Police Department News

ஆசிட் வீசப்பட்டு எரிக்கப்பட்ட மடிப்பாக்கம் யமுனா சிகிச்சை பலனின்றி மரணம்: ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் கைது

மடிப்பாக்கத்தில் செவிலியராக பணியாற்றிய  யமுனா என்பவரை ரத்தப் பரிசோதனை மைய உரிமையாளர் ஆசிட் ஊற்றி எரித்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜா (40), இவரது ரத்தப் பரிசோதனை மையத்தில் யமுனா (33) செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 19 பிப்ரவரி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் யமுனாவை ராஜா வேலைக்கு அழைத்துள்ளார்.

யமுனா வேலைக்கு வந்துள்ளார். மதியம் 1 மணி அளவில் அவர் அலறி கூச்சலிடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரத்தப் பரிசோதனை மையத்திற்குள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர். அப்போது தீப்பற்றிய நிலையில் யமுனா துடிப்பதைப் பார்த்து தீயை அணைத்து அவரை மீட்டுள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 46 சதவீத பலத்த தீக்காயத்துடன் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் யமுனாவை தவறான நோக்கத்தில்ராஜா  ராஜா அணுகியது தெரிய வந்தது. அவர் எண்ணத்திற்கு இடம் தராததால் யமுனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், ரத்தப் பரிசோதனை மையத்தில் உள்ள எரியும் நிலையில் உள்ள திரவத்தை யமுனா மீது  ஊற்றியதும், பின்னர் அவர் மீது தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.

ஸ்பிரிட் ஊற்றி யமுனாவை எரித்த ராஜாவை போலீஸார் கைது செய்து 307-வது பிரிவின் கீழ்( கொலை முயற்சி) 4H women harassment act-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் மருத்துவமனையில் ஆபத்தான நிலயில் அனுமதிக்கப்பட்டிருந்த யமுனாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி யமுனா உயிரிழந்தார்.

இதையடுத்து ராஜாவின் மீது போலீஸார் 302-வது பிரிவின் (கொலைக்குற்றம்) கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்த யமுனா காதல் திருமணம் செய்து கணவர் மற்றும் 4 வயது பெண்குழந்தையுடன் வசித்து வந்தார்.

தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ரத்தப் பரிசோதனை மையத்தில் பணிக்கு சேர்ந்த யமுனாவிடம் பாலியல் ரீதியாக அணுகிய உரிமையாளர் ராஜாவின் முயற்சிக்கு இணங்காதததாலேயே இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. யமுனா உயிரிழந்ததால் அவரது 4 வயது மகளும் கணவரும் நிராதரவான நிலையில் மருத்துவமனையில் கண்ணீர் வடித்தபடி நின்றது மருத்துவமனை ஊழியர்களையே கலங்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published.