Police Department News

சென்னையில் பயங்கரம்: கூடா நட்புக்கு இடையூறு; 9 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த இளைஞர் கைது

சென்னையில் நடுத்தர வயதுப் பெண்ணுடன் கூடா நட்பு  வைத்திருந்த இளைஞர், அந்த நட்புக்கு இடைஞ்சலாக இருந்த 9 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்தார். இதனால் அந்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். சிறுவனின் தாயை விசாரித்து வருகிறார்கள்.

சென்னை எம்ஜிஆர் நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (38). வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 9 வயதில் ரித்தேஸ் சாய் என்ற மகன் இருந்தார். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு நாகராஜ் என்ற இளைஞர் நட்பாகி உள்ளார். நாகராஜின் நட்பு தினசரி வீட்டுக்கு வந்துசெல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நாளடைவில் நாகராஜுக்கும் மஞ்சுளாவுக்கும் வளர்ந்த நட்பு, கூடா நட்பாக மாறியுள்ளது.

அரசல் புரசலாக இந்த விவகாரம் கார்த்திகேயன் காதுக்கு வந்து அவர் இதை கண்டித்துள்ளார். ஆனால் மஞ்சுளா – நாகராஜின் நட்பு குறையவில்லை.  இது  குறித்து சிறுவன் ரித்தேஸிடம் அவர்  தந்தை கார்த்திகேயன்  கூறிவிட்டதாக நாகராஜ் மற்றும் மஞ்சுளாவுக்கு கோபம் இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நாகராஜையும், மஞ்சுளாவையும் கையும் களவுமாக பிடித்த கணவர் கார்த்திகேயன் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் நாகராஜை எச்சரித்து அனுப்பினர். நாகராஜ் மீது ஏற்கெனவே கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

கொடூர மனம் படைத்த நாகராஜுக்கும், மஞ்சுளாவுக்கும் சிறுவன் ரித்தேஷ் இடைஞ்சலாக இருப்பதாக எண்ணம் தோன்றியது.  இதில் நாகராஜ் ரித்தேஷ் மீது கொலை வெறியில் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து இந்தி டியூஷன் படிப்பதற்காக சிறுவன் ரித்தேஷ் ராமாபுரம் ஜெய் பாலாஜி நகருக்கு சென்றுள்ளார்.

அதன் பிறகு சிறுவன் ரித்தேஷ் வீடு திரும்பவில்லை. உடனடியாக கார்த்திகேயன் டியூஷன் சென்டரில் சென்று கேட்டபோது சிறுவன் ரித்தேஷை நாகராஜ் வந்து கண் சிகிச்சைக்காக அழைத்துச்சென்றதாக கூறியுள்ளனர்.

இதனால் பயந்துபோன கார்த்திகேயன், தனது மகனைக் காணவில்லை என்றும், மனைவியின் நண்பர் நாகராஜ்தான் தன் மகனை கடத்திச் சென்றதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் துரிதமாக செயல்பட்டு நாகராஜின் செல்போனை ஆய்வு செய்தனர்.

ஆனால் நாகராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசியாக வேலூரில் டவர் காட்டியது. இதையடுத்து வேலூருக்குச் சென்ற தனிப்படை போலீஸார் வேலூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து நாகராஜைப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தாம் சிறுவன் ரித்தேஷை கடத்தியதாக நாகராஜ் ஒப்புக்கொண்டார். அதுவரை சிறுவன் உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த போலீஸாருக்கு நாகராஜ் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவன் ரித்தேஷை கடத்தி சேலையூர் இந்திரா நகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அடைத்து வைத்து கொலை செய்ததாக நாகராஜ் கூறியுள்ளார்.

உடனடியாக சென்னை போலீஸாருக்கு தகவல் கொடுத்து சேலையூர் அபார்ட்மெண்டுக்கு சென்று பார்க்கச் சொன்னார்கள். அங்கு சென்று பார்த்தபோது சிறுவன் ரித்தேஷ் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். உடனடியாக ரித்தேஷ்  உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜிடம் நடத்திய விசாரணையில் தங்களது நட்புக்கு ரித்தேஷ் தடையாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், குடும்ப நண்பர் என்பதால் தான் அழைத்தவுடன் ரித்தேஷ் வந்துவிட்டதாகவும், சிறுவனை கடத்திச்சென்று சேலையூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அடைத்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் மது அருந்தியதாகவும் மது போதை தலைக்கேறியவுடன் நட்புக்குத் தடையாக இருக்கும் சிறுவனை கொல்ல வேண்டும் என்ற வெறி அதிகமானதாகவும் மதுபாட்டிலை உடைத்து சிறுவன் கழுத்தை அறுத்ததாகவும், பின்னர் இரும்புத்தடியால் சிறுவனை தலையில் தாக்கி கொன்றதாகவும் பின்னர் ரூமை பூட்டிவிட்டு வேலூருக்கு தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரை கைது செய்த போலீஸார், இந்த கொலையில் சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரின் தவறான தொடர்பு ஒன்றுமறியா அப்பாவி சிறுவனின் உயிரையே பறிக்கும் அளவுக்கு கொடூரச் செயலாக மாறியது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.