கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த தி.நகர் துணை ஆணையரிடம் நான் யார் தெரியுமா? என்று பந்தா காட்டிய போலி நிருபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். அனைவரையும் பதற்றப்பட வைத்த இந்த சம்பவத்தில் போலீஸார் மிகுந்த பதற்றத்துடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் ஒரு நபர் துணை ஆணையர் அரவிந்தனிடம் எப்படி இப்படி நடக்கலாம், போலீஸ் என்ன செய்கிறது, பெண்களுக்கு என்ன பாதுகாப்பு என்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்.
மொத்தமாக செய்தியாளர்கள் குழுமியிருந்ததால் அந்த நபரையும் செய்தியாளர் என்று துணை ஆணையர் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த நபரின் நடத்தையைப் பார்த்து சந்தேகமடைந்த மற்ற செய்தியாளர்கள் சந்தேகமடைந்து அவரை விசாரித்த போது அவர் ஏதோ ஒரு பத்திரிகை பெயரை கூறினார்.
அப்படி ஒரு பத்திரிகையே வரவில்லை என்று கூறிய செய்தியாளர்கள் இவரை விசாரியுங்கள் என்று கூறினர். பின்னர் போலீஸார் அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் போலி நிருபர் என தெரிந்தது. பின்னர் அவரை போலீஸார் கைது செய்தனர்.