Police Department News

பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தந்தை பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.

காலையில் பெரியார் சிலையின் தலை தனியாக கீழே கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், துண்டிக்கப்பட்ட தலையை, பெரியாரின் சிலையில் தற்காலிகமாக பொருத்தினர். இதனிடையே, பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் அறிந்து அங்கு வந்த திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார், பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருவதால், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, சாலை மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட கிராமத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் இல்லை என்பதால், மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.