சென்னையில் பெண் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையுடன் தன்னிடம் பிரச்சினையுடன் வந்த 1500 தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து சேர்த்து வைத்துள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஜெயமணி (56). இவர் மற்ற போலீஸார் போல் தினசரி வேலையில் மூழ்கி விடுவதோடல்லாமல் கூடுதலாக தனிப்பட்ட முறையில் சில வேலைகளை செய்துள்ளார். இதன் மூலம் பலராலும் பாராட்டப்படும் இவரது சேவை அறிந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் பாராட்டியுள்ளார்.
காவல்துறையை பொதுமக்கள் பல்வேறு விஷயங்களுக்காக நாடுவது வழக்கம். காவல் துறையை விமர்சித்தாலும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் காவல்துறை உதவியைத்தான் நாம் அனைவரும் நாடுகிறோம். திருட்டு, கொலை, கொள்ளை மட்டுமல்ல அண்டை வீட்டுக்காரருடன் சண்டையா? கணவன் மனைவி பிரச்சினையா? வயதான தாய் தந்தையரை பிள்ளைகள் கவனிக்கவில்லையா? இது போன்ற சமுதாயப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பது காவல்துறையே.
காவல்துறை உன்னதமான சமுதாயப் பணியாற்ற வேண்டிய இடத்தில் குடும்ப உறவுகள் சார்ந்த பிரச்சினையில் போலீஸார் சற்று எச்சரிக்கையாகவே அணுகுவார்கள். ஆனாலும் எதையும் சிறப்பாக கையாளும் நபர்கள் சிலர் இருப்பார்கள். அந்த வரிசையில் குடும்பப் பிரச்சினையுடன் வருபவர்களை கனிவுடன் அணுகி அவர்கள் பிரச்சினையை சரியாக அணுகி 1500 குடும்பங்களில் விளக்கேற்றி வைத்துள்ளார் பெண் எஸ்.ஐ ஜெயமணி.
தம்பதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையுடன் வரும்போது அவர்களது விதவிதமான பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப கவுன்சிலிங் கொடுத்து சேர்த்து வைப்பது சிக்கலான காரியம், அதை சரியாக செய்து பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார் ஜெயமணி.
தனது பணியை அத்துடன் நிறுத்திவிடாமல் தனது சொந்த செலவில் 15 அனாதைப்பிணங்களை அடக்கம் செய்துள்ளார். பெற்றோரால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளை தத்து எடுத்து தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார். இவரது சமூக சேவையைப் பாராட்டி, பல்வேறு சமூக அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளது.
சமீபத்தில் ரோட்டரி கிளப் உலக மகளிர் தினத்தையொட்டி, தலைச்சிறந்த சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இவரைப்பற்றிய தகவலறிந்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெண் எஸ்.ஐ. ஜெயமணியை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெயமணியின் கணவர் வெளிநாட்டில் டிரைவராகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக காவல் துறையில் ஜெயமணி பணியாற்றி வருகிறார்.