குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 172(1) ஆனது புலனாய்வு அதிகாரிகள் வழக்கு நாட்குறிப்புகளை பராமரிப்பது பற்றி கூறுகிறது
இந்த அத்தியாயத்தின்படி ஒரு புலனாய்வு நடத்தும் காவல் அதிகாரி ஒவ்வொருவரும் தமது புலனாய்வு நடவடிக்கைகளை ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும். தனக்கு தகவல் கிடைத்த நேரம், தான் பார்வையிட்ட இடம், புலன்விசாரணை துவக்கப்பட்ட நேரம், புலனாய்வு மூலம் உறுதிபடுத்தப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை அந்த நாட்குறிப்பில் இடம்பெற வேண்டும்.
நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கு சாட்சியாக அன்றி தமக்கு உதவுவதற்காக அந்த நாட்குறிப்புகளை கொண்டு வரச்செய்து அந்த நீதிமன்றம் தக்க முறையில் பயன்படுத்தலாம்.
ஆனால் எதிரி அல்லது அவரது சார்பில் வேறு யாரும் அத்தகைய நாட்குறிப்புகளை தருவிக்க இயலாது. நீதிமன்றம் பரிசீலிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக தாங்களும் நாட்குறிப்புகளை பார்வையிட வேண்டுமென எதிரி உரிமை கொண்டாடவும் முடியாது. ஆனால் நாட்குறிப்புகளை தனது நினைவுகளை புதுப்பித்து கொள்வதற்காக அதனை பதிவு செய்த காவல்துறை அதிகாரி பயன்படுத்தும் போதும் அத்தகைய காவல்துறை அதிகாரியை மறுத்தலிப்பதற்காக அந்த நீதிமன்றம் பயன்படுத்தும் போதும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 161 வது பிரிவிலும் மற்றும் 155 வது பிரிவிலும் கூறப்பட்டுள்ளவை எதிரிக்கு பொருந்தும்.
மேற்சொன்ன சட்டப் பிரிவின் படி ஒரு புலன்விசாரணையை மேற்கொள்ளும் காவல் அதிகாரி அவருடைய புலன்விசாரணை நடவடிக்கைகளை நாட்குறிப்பில் எழுத வேண்டும். அந்த நாட்குறிப்பினை நீதிமன்றம் வழக்கிற்கு உதவுவதற்காக பரிசீலிக்கலாமே ஒழிய அதனை ஒரு சாட்சியமாக ஏற்றுக் கொள்ள கூடாது. அதேபோல் காவல் அதிகாரி அந்த நாட்குறிப்பினை தன்னுடைய நினைவுகளை புதுப்பித்து கொள்வதற்காக பயன்படுத்தும் பொழுது அது குறித்து குறுக்கு விசாரணை செய்ய எதிரிக்கு உரிமை உண்டு.
எனவே ஒரு காவல்துறை அதிகாரியால் நாட்குறிப்பில் எழுதப்பட்ட பகுதிகள் வரை மட்டுமே அந்த வழக்கு நாட்குறிப்பை பார்த்து தன்னுடைய நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு ஒரு காவல்துறை அதிகாரி தன்னுடைய நினைவுகளை வழக்கு நாட்குறிப்பினை பார்த்து புதுப்பித்து கொள்ளும் பட்சத்தில் அவரை அதுகுறித்து குறுக்கு விசாரணை செய்ய இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 161 வது கீழ் எதிரிக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. OP. NO – 2840/2011
P.K.சந்திரசேகரன் Vs ஆய்வாளர், CBI சென்னை
2011-2-LW-90