சென்னையை போன்று, மதுரையும் காவல் ஆணையருக்கு கீழ் வருமா?
மதுரையில், குற்றங்கள், சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க சென்னையை போன்று மதுரை முழுவதும் காவல் ஆணையருக்கு கீழ் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
நகர் எல்லைப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடந்தால் எந்த காவல்நிலையத்தின் கீழ் வருகிறது என்று போலீசார் விசாரித்து முடிவு எடுக்க கால தாமதாமாகிறது, நகரை ஒட்டியுள்ள புறநகர் ஸ்டேஷன்களில் சில பகுதிகள் நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நகரில் போலீசார் பற்றாக்குறை உள்ள நிலையில் விரிவாக்கப் பகுதிகளுக்கு ரோந்து செல்லுவது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதனாலேயே இப்பகுதிகளில் திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறார்கள்.
இதை தவிர்க்க சென்னையை போன்று மதுரையையும் கமிஷனரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது அவசியம். சென்னை மாவட்டம் முழுவதும் கமிஷனருக்கு கீழ் உள்ளது. இவருக்கு கீழ் இணைக் கமிஷனர்கள், துணைக் கமிஷனர்கள் என ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., அந்தஸ்தில் அதிகாரிகள் உள்ளனர், இவர்கள் சட்டம் ஒழுங்கு குற்றத்தை சேர்த்தே கவனிக்கின்றனர். இதனால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. போலீஸ் பற்றாகுறையும் சமாளிக்கப்படுகிறது. இதே போன்று மதுரையிலும் நடைமுறைப்படுத்தலாம். ஏ.டி.ஜி.பி., அந்தஸ்தில் கமிஷனரை நியமித்து நான்கு திசைகளாக பிரித்து அதன் கீழ் மண்டலங்கள் உருவாக்கி 4 திசைகளுக்கும் ஐ.ஜி., அந்தஸ்திலும், மண்டலங்களுக்கு டி.ஐ.ஜி., அல்லது எஸ்.பி., அந்தஸ்திலும் அதிகாரிகளை நியமிக்கலாம். இது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.