
திருட்டு போன்கள்: தூத்துக்குடி சைபர் கிரைம் அதிரடி…
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.
அதன்படி தனிப்படையினர் செல்போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கடந்த 15.10.20 அன்று 102 செல்போன்களும், 9.12.20 அன்று 60 செல்போன்களும், 12.2.21 அன்று 61 செல்போன்களும், 2.7.21 அன்று 60 செல்போன்களையும் எஸ்.பி. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகும் தனிப்டையினர் கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூ.7 லட்சம் மதிப்புள்ள 70 செல்போன்களை கண்டுபிடித்து, அவைகளை பறிமுதல் செய்து இன்று எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
பின்னர் எஸ்.பி. பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக காணமால் போன பொதுமக்களின் செல்போன்களை சைபர் பிரிவு போலீசார் 5வது கட்டமாக கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதுவரை மொத்தம் 353 தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் டி.எஸ்.பி. தலைமையில் ஒரு ஆய்வாளர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய சைபர் கிரைம் பிரிவு கடந்த சில மாத காலமாக மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
பெண்கள் சமூக வலை தளங்களில் தங்களது சுய விவரங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் நடைபெறும் குற்றங்களுக்கு இங்கு புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக வலை தளங்களை பயன்படுத்துவதில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சமூக வலை தளங்கள் சம்மந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்றால் உடனடியாக பொதுமக்கள் 155260 என்ற சைபர் குற்றப்பிரிவு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல் துறை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
