
குற்ற சம்பவங்கள் அறவே தடுக்க பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கை – மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்
திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் தலைமையில், திருச்சி மாநகர காவல் அலுவலக கலந்தாய்வு கூட்ட அறையில் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) R.சக்திவேல் மற்றும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) R.முத்தரசு கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் வழங்கிய மேலான அறிவுரைகளின்படி செயல்பாட்டில் உள்ள முக்கிய ரவுடிகளின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தினசரி ஆய்வு செய்து, புலன் விசாரணை நிலையில் உள்ள வழக்குகளை விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுடிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான உரிய தண்டனையை பெற்றுத்தர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்களை சந்தித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் இ.த.ச பிரிவு 229(A) -ன்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பழிவாங்கும் கொலை சம்பவங்கள் நடைபெறா வண்ணம் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை அடையாளம் கண்டறிந்து அவர்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து காவல் அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
அனைத்து சரித்திர பதிவேடு ரவுடிகளை காவல் அலுவலர்கள் தினசரி தணிக்கை செய்ய வேண்டும் என்றும், நிபந்தனைக்குட்பட்டு பிணையில் வந்தவர்கள் நிலையத்தில் கையொப்பமிடுகிறார்களா என்று தணிக்கை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளிலிருந்து விடுதலையான எதிரிகளை கண்காணிக்க வேண்டும். செயல்பாட்டில் உள்ள பதிவேடு ரவுடிகளின் சொத்து விபரங்களை சேகரித்து அது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருச்சி மாநகரத்தில் ரவுடிகளால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் அறவே தடுக்கும் பொருட்டு தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எவ்வித பாரபட்சமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
