
மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி, வசூல் வேட்டையில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மனித உரிமைகளை பேணவும், மனித உரிமைகள் மீறப்படும்போது, அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, அரசுக்கு தக்க பரிந்துரை செய்யவும், டில்லியில் தேசிய மனித உரிமை கமிஷன் உள்ளது. அதுபோல, தமிழகத்திலும், மாநில மனித உரிமை கமிஷன் உள்ளது. ஆனால், சில தனியார் அமைப்பினர், தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமை கமிஷனுடன் தொடர்புபடுத்தி, போலி அடையாள அட்டைகள் வழங்கி, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துஉள்ளது.
வாகனங்களில், மனித உரிமை, மத்திய, மாநில அரசு நிர்வாகிகள் போல, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி வலம் வருகின்றனர். அதுபோன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்றும், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கமிஷனர், ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
