

25,000 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை; உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தகவல்
மதுரை ‘தென் மாவட்டங்களில் 65 ஆயிரம் வழக்குகளில், 25 ஆயிரம் வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என, மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தார்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது குறித்த ஒரு வழக்கில், நீதிமன்றத்திற்கு உதவ, மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., அஸ்ரா கார்க் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.அப்போது அவர், ‘இறுதி அறிக்கை அல்லது குற்றப்பத்திரிக்கையை கீழமை நீதிமன்றங்களில் போலீசார் தாக்கல் செய்கின்றனர்.அதற்கு நீதிமன்றத்திலிருந்து ஒப்புதல் சான்று வழங்குவதில்லை. பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் உள்ளன’ என, தெரிவித்தார்.நீதிபதி சுவாமிநாதன், ‘போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது, அதை பெற்றுக் கொண்ட தேதியை குறிப்பிட்டு, கீழமை நீதிமன்றங்கள் தரப்பில் ஒப்புகைச் சான்று வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டார்.இந்த வழக்கை நேற்று, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் விசாரித்தார்.
ஐ.ஜி., அஸ்ரா கார்க் ஆஜராகி கூறியதாவது:தென் மாவட்டங்களில், 65 ஆயிரம் வழக்குகளில், இரண்டு மாதங்களில், 25 ஆயிரம் வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதிமன்ற அலுவலர்கள், போலீசார் போதிய ஒத்துழைப்பு அளிக்கின்றனர்; 38 ஆயிரம் வழக்குகளில் தடய அறிவியல் துறை உட்பட பிற துறைகளிலிருந்து அறிக்கை வர வேண்டியுள்ளதால், வந்தபின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதி சுவாமிநாதன் தன் உத்தரவில், ‘ஐ.ஜி., மற்றும் காவல் துறை அதிகாரிகளை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, மேலும் அறிக்கை தாக்கல் செய்ய நவ.,1க்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது’ என்றார்.
