`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி?
சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது.
சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்நதவர் ஜெகதீசன். இவரின் வீட்டில் கடந்த 21ம் தேதி காலை 10.45 மணியிலிருந்து 2.45 மணிக்குள் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஜெகதீசன், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் மகிமைவீரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கொள்ளை நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண்ணும் வாலிபரும் சர்வசாதாரணமாக வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டு வெளியில் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து அவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தனர். புகார் கொடுத்த ஜெகதீசனிடம் அந்த வீடியோக்களைக் காண்பித்தனர். அப்போது அவர் அதிர்ச்சியடைந்தார். மேலும், அந்த வாலிபர் தன்னுடைய தூரத்து உறவினர் கார்த்திக் என்று கூறினார். இதையடுத்து கார்த்திக்கைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், “கடந்த 21-ம் தேதி ஜெகதீசன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். வழக்கமாக அவரின் வீட்டுச் சாவியை மறைத்து வைப்பது வழக்கம். அந்த இடம் ஜெகதீசனின் உறவினர் கார்த்திக்கிற்குத் தெரியும். இதனால் சம்பவத்தன்று தன்னுடைய காதலி நித்யாவை அழைத்துக்கொண்டு ஜெகதீசன் வீட்டுக்கு வந்துள்ளார் கார்த்திக். இருவரும் வீட்டின் சாவியை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். பிறகு பீரோவிலிருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் வெளியில் வந்துள்ளனர்.
சிசிடிவி கேமராவில் சிக்கிய இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கார்த்திக், பி.இ படித்துள்ளார். நித்யா, பி.டெக் படித்துள்ளார். கோயம்பேடு, 2-வது தெரு, அவ்வை திருநகரில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார் கார்த்திக். நித்யா, மதுரவாயலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். இருவரும் கல்லூரி படிக்கும் போது காதலித்துள்ளனர். படிப்பு முடிந்தபிறகு இருவரும் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர். ஆனால், போதிய வருமானம் கிடைக்கவில்லை. ஆடம்பரமாக வாழ இருவரும் திருட முடிவு செய்துள்ளனர்.
வெளியிடங்களில் திருடினால் சிக்கல் எனக்கருதிய கார்த்திக், நித்யா இருவரும் தங்கள் உறவினர்கள் வீடுகளில் திருடலாம் என முடிவு செய்துள்ளனர். இதற்காக நித்யா தன்னுடைய உறவினர்கள் வீட்டுக்கு கார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளார். அதுபோல கார்த்திக் தன்னுடைய சொந்தக்காரர்கள் வீட்டுக்கு நித்யாவை அழைத்துச் சென்றுள்ளார். பணக்கார உறவினர்கள் வீடுகளுக்கு மட்டுமே செல்லும் இந்த ஜோடி, அவர்களின் குடும்பத்தினரோடு நெருங்கிப் பழகியுள்ளது. இதனால் உறவினர்கள் வீட்டைப் பூட்டி விட்டு சாவியை மறைத்து வைக்கும் இடத்தையும் இந்த ஜோடி நோட்டமிட்டுள்ளது. பிறகு உறவினர்கள் வீடுகளில் இல்லாத சமயத்தில் அங்கு சென்று சாவியை எடுத்து சோப் மூலம் அதன் அச்சுவை எடுத்துள்ளனர். டூப்ளிக்கேட் சாவியைத் தயாரித்து உறவினர்கள் இல்லாத சமயத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில உறவினர்களிடம் இந்த ஜோடி சிக்கியுள்ளது. அப்போது உறவினர் என்பதால் சம்பந்தப்பட்ட உறவினர்கள் இந்த ஜோடியை மன்னித்து விட்டுள்ளனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்காததால் தொடர்ந்து இந்த ஜோடி, கொள்ளையடித்து வந்துள்ளனர். கொள்ளையடித்து பெரிய பணக்காரர் ஆன பிறகுதான் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்துள்ளனர். தற்போது ஜெகதீசன் கொடுத்த புகாரில் கார்த்திக் மற்றும் நித்யாவைக் கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து 4 சவரன் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.
உறவினர்கள் வீடுகளில் மட்டுமே கொள்ளையடித்த இந்த இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. திருட்டில் இது புதுரகம் என்று போலீஸார் சொல்கின்றனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர் சென்னை