

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அடி-உதை விழுந்தது.
முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் மீது மோதியது.
மதுரை சித்தாலாட்சி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ், நேற்று மதியம் விராட்டிபத்துக்கு சென்றது. முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய டிரைவர் செந்தில்குமார், மருத்துவ உதவியாளர் சூர்யா ஆகியோர் காயமடைந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கி விட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆம்புலன்ஸ் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விபத்தை ஏற்படுத்தியவர் அன்பு சூர்யா என்பது தெரியவந்தது. அவரை போலீசார் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓடிய 6 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
