
மதுரையில் விதிமுறைகளை மீறியதாக 350 வாகனங்கள் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை
மதுரையில் 300 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது.
வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர ட்ரோன்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை வழியாக காளையார் கோவில், பசும்பொன் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் சில வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது.
எனவே போலீசார் அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் ட்ரோன் கேமிரா ஆகியவற்றின் காட்சிப்பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள். அப்போது மதுரையில் 300 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகள் வழியாகவும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜைக்கு வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. எனவே அந்தப் பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பகுதிகளில் 50 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிலைமான், கருப்பாயூரணி போலீசார் அந்த வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 350 வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது
