
மதுரை சிலைமான் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.
மதுரை சிலைமான் போலீசார் நேற்று ராமேசுவரம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் 3 பேர் நின்றனர்.
எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்து பார்த்தனர்.
அப்போது அதில் 550 கிராம் கஞ்சா மற்றும் 720 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த சிலைமான் போலீசார் 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் தத்தனேரி, காந்தியார் தெரு ஜெகன் மகன் சந்தோஷ்குமார் (வயது 20), ரமேஷ் மகன் மணிகண்டன் (20), புளியங்குளம், பிள்ளையார் கோவில் தெரு முருகானந்தம் மகன் மணிமாறன் (21) என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் சிலைமான் போலீசார் கைது செய்தனர்.
