அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் கைது
மதுரை மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன. இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சினிமா ரசிகர் மன்றங்களை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் விதிமுறை களை மீறி செல்வோரை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகம் சாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
அவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். ரிசர்வ் லைன், ஆத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 5 பேர் பிடிபட்டனர். அப்போது அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் கோசாகுளம், பெரியார் நகர் வல்லரசு (வயது 33), ஆனையூர் குமார் மகன் அருண் பாண்டியன் (23), கோசாகுளம், பாண்டியன் நகர் கண்ணன் மகன் வருண் பாலாஜி (24), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் நசீர் உசேன் மகன் முஜிபுர் ரஹ்மான் (19) மற்றும் தபால் தந்தி நகர், பார்க் டவுன் ஆதிஸ்வரன் மகன் சிவபாலன் (23) என்பது தெரியவந்தது. அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை கட்ட பொம்மன் நகர் சந்திப்பு முதல் 50 அடி ரோடு வரை அதிவேகமாக வாகனம் இயக்கியதாக, 3 மோட்டார் சைக்கிள்களை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை குருவிக்காரன் சாலை சினிமா தியேட்டர் முன்பு அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதாக சிம்மக்கல், அபிமன்யு தெரு கருப்பையா மகன் சந்தோஷ் (19), கே.கே.நகர், பாரதியார் தெரு ராமலிங்கம் மகன் கவுரவ் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை குருவிக்காரன் சாலை ஆஸ்பத்திரி அருகே அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அய்யர் பங்களா, அய்யாவு நகர் சிதம்பரம் மகன் தீபக் (24), தல்லாக்குளம் பச்சைக்கிளி மகன் சூர்யா (21) ஆகிய 2 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.