
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை முயற்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போடுவார்பட்டி தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ராசு என்ற கருப்புசாமி(54). விவசாயி. இவரது மனைவி செல்வி(45). நேற்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வீட்டுமுன்பு கட்டப்பட்டிருந்த நாய்க்கு பிஸ்கட்டுகளை வாங்கி போட்டுவிட்டு உள்ளே சென்றனர். வீட்டு பீரோவை உடைத்து அவர்கள் நகை, பணம் எதுவும் உள்ளதா என சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி ச்சென்றனர்.
அதன்பிறகு கருப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருந்தபோதும் தாங்கள் மறைத்து வைத்திருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான தங்கசங்கிலி கொள்ளையர் கண்ணுக்கு படாததால் அது தப்பியது.
வீட்டில் இருந்த செல்போனை மட்டும் அவர்கள் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசில் கருப்புசாமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் முக்கிய தடயங்களை பதிவு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது.
