அரசு ஊழியர்களுக்கு சலுகை இல்லை.. எந்த நேரத்திலும் வேலைக்கு வர வேண்டும்.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தொழிற்சாலைகள் சட்டத்தின் (Factories Act) படி அரசு ஊழியர்கள் கூடுதல் நேர கொடுப்பனவு பெற தகுதியானவர்களா என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Security Printing & Minting Corporation of India நிறுவனத்தின் மேற்பார்வையாளர்களுக்கு கூடுதல் நேர கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில், அரசு ஊழியர்கள் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் கூடுதல் நேர கொடுப்பனவு பெற தகுதியானவர்கள் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் வி.சுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு ஊழியர்களுக்கு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் கூடுதல் நேர கொடுப்பனவு வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
அரசு ஊழியர்கள் தனி அந்தஸ்து பெற்றவர்கள் எனவும், பணி ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலாளர் நல சட்டங்கள் அரசு ஊழியர்களின் பணியை கட்டுப்படுத்தாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு உள்ளிட்ட சிறப்பு சலுகைகள், தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் நேர கொடுப்பனவு சலுகைகளை அரசு ஊழியர்கள் கேட்பது, இரண்டு விதமான சலுகைகளையும் பெறுவதற்கான முயற்சியா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள், தொழில்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை போல அல்லாமல், அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் அரசின் தேவைக்கு ஏற்ப வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.