
வளர்ச்சி திட்ட பணிகள்; மேயர் ஆய்வு
மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
41-வது வார்டு டீச்சர்ஸ் காலனியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள், பாபுநகர் பகுதியில் வாய்க்காலை தூர்வாரி தூய்மை செய்வது குறித்தும், ஐராவதநல்லூரில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி மராமத்து பணிகள், எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள மாநகராட்சி கழிவறைகளை மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல், அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிட பணிகளையும் மேயர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அந்த வளாகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஆய்வு செய்தார். அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மேயர் ஆய்வு செய்து நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் அடிப்படை வசதி பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் அரசு, மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர் திருமலை, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன், கவுன்சிலர்கள் செந்தாமரைகண்ணன், காளிதாஸ், பிரேமா, உதவி செயற்பொறியாளர்கள் மயிலேறிநாதன், சுப்பிரமணியன், சுகாதார அலுவலர் கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
