
திண்டுக்கல் பழனியில் பயணியின் கழுத்தை அறுத்து வழிப்பறி செய்ய முயன்ற 2 பேர் கைது
மதுரையை சேர்ந்தவர் அழகுமலைகண்ணன். இவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றார். மலைக்கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் மதுரைக்கு செல்வதற்காக பழனி பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அழகுமலை கண்ணனை மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து பணம் கேட்டனர். அவர் தர மறுக்கவே கத்தியை எடுத்து அழகுமலைகண்ணனின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் அவர் சத்தம் போட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பழனி நகர் போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கோதைமங்கலத்தை சேர்ந்த மாசானம் (வயது32), பாண்டியன் (35) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்து வேறு ஏதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ள்ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் அடைந்த அழகுமலைகண்ணனை சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து ள்ளனர்
