Police Department News

மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர்களது ஆலோசனை பேரில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது தராசுகளை மறுமுத்திரையிடாதது, தரப்படுத்தாத எடை அளவுகள் பயன்படுத்தியது, மறுபரிசீலனை சான்று காட்டி வைக்காதது, நிறுவன உரிமங்கள் புதுப்பிக்காதது ஆகியவற்றிற்காக 26 நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டது.

குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பதிவுச்சான்று பெறாமல் பொட்டலப் பொருட்களை விற்பனை செய்த, அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்த 5 நிறுவனங்கள் சிக்கியது.

குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் 14 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அந்த நிறுவனங்களிடம் இருந்து 23 ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 260 சம்பள நிலுவைத் தொகை பெற்று வழங்கப்பட்டது.

மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிற்கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1 குழந்தை தொழிலாளர் மற்றும் 4 வளரிளம் பருவ ஊழியர்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் பதிவுச் சான்று பெற, தராசுகளை முத்திரையிட labour.tn.gov.in இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயது நிறைவடையாத குழந்தைகளை அபாய கரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு செய்தால் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளது. குழந்தை தொழிலாளர் குறித்து 1098, 155214 அல்லது ”Pencil portal” இணையதளம் வழியாக புகார் செய்யலாம்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்- பாதுகாவலர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க இயலும். எடை அளவைகள் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் முரண்பாடு தெரிய வந்தால் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

முத்திரையிடாத எடை அளவைகள் பயன்படுத்துவோர், அதிகபட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பற்றி National Consumer Helpline எண். 1915 அல்லது இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.