Police Department News

மதுரைமீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.
சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறுவது சித்திரை திருவிழா.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர்புரியும் திக்கு விஜயம் நேற்று இரவு நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

கோவிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல வகை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 7.45 மணி அளவில் முதலாவதாக திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினார்கள்.

அதன் பின் திருக்கல்யாண வைபவங்கள் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.

மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக்கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார்.சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை சிவப்பு பட்டு அணிந்திருந்தார்.

திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணிய வாசனம், பஞ்சகாவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து பவளக்கனி வாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மனாக கார்த்திக் பட்டரும், சுந்தரேசுவரராக பிரபு பட்டரும் வேடம் தரித்திருந்தனர். அவர்கள் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த பிரபு பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.

அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் புதுத்தாலி மாற்றி கொண்டனர்.

திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித்திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டு களித்தனர்.

சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர்.

திருக்கல்யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். திருக்கல்யாணத்தை பார்த்தால் வீட்டில் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

இதனால் சுவாமி திருக்கல்யாணத்தை காண ஏராளமானோர் திரளுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் பலர் திரண்டனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகரமே இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது.

சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் இன்று இரவு வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள்

Leave a Reply

Your email address will not be published.