நாளை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை (5ந் தேதி) நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 30ந் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 750 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக நீர்வரத்து குறைக்கப்பட்டது.
இந்த தண்ணீர் மதுரையை சென்றடைந்துள்ளது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 172 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 572 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதில் 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காகவும், 500 கன அடி நீர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காகவும் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 52.92 அடியாக உள்ளது. 272 கன அடி நீர் வருகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.10 அடியாக உள்ளது. 204 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.70 அடியாக உள்ளது. 71 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 84.30 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 1, தேக்கடி 2, கூடலூர் 1.4, சண்முகாநதி அணை 1.2, உத்தமபாளையம் 1, போடி 3.2, வைகை அணை 13, சோத்துப்பாறை 9, மஞ்சளாறு 3, பெரியகுளம் 2.4, வீரபாண்டி 13, அரண்மனைபுதூர் 2.6, ஆண்டிபட்டி 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் விரதம் இருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி, செயற்கையான மற்றும் அதிக விசையான குழாயை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருட்களை கலந்து பீய்ச்சுவதால் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்களும், பக்தர்கள், பட்டர்கள், பணியாளர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
மேலும் சிலர், தண்ணீர் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து அந்த பாக்கெட் தண்ணீரை சுவாமியின் மீது பீய்ச்சுகின்றனர். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவின்போது பக்தர்கள் அதிக விசை உடைய குழாயை தோல் பையில் பொருத்தி தண்ணீர் பீய்ச்ச வேண்டாம். விரத ஐதீகத்தின்படி தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியங்கள், வேதிப்பொருட்கள் கலக்காமல் சுத்தமான தண்ணீர் மட்டும் பீய்ச்சும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது