
கொலை வழக்கில் தேடப்பட்டவர் போலீசில் பிடிபடாமல் இருக்க பிச்சைக்காரர் வேடத்தில் திரிந்த ரவுடி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் தார்ப்பாய் முருகன் கோஷ்டியை சேர்ந்த கும்பலுக்கும் இடையே கடந்த 1998-ல் மோதல் ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரமேஷ் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ்குமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
கடந்த 22 ஆண்டுகளாக அவரை போலீசார் தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்தநிலையில் ரமேஷ்குமார் திண்டுக்கல் பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றித்திரிவதாக செக்கானூரணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றிதிரிந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
அவரை செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசில் சிக்கிவிடாமல் இருக்க பிச்சைக்காரர் வேடத்தில் ரமேஷ்குமார் சுற்றி திரிந்துள்ளார்.
விசாரணைக்கு பின் அவரை மதுரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாலிபர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த செக்கானூரணி போலீசாரை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.
