கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.