
கோவையில் 3 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெயசுமா (வயது 41). அதே பகுதியை சேர்ந்த மதுமிதா (25), கல்பனா (46) இவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் உறவினர்கள். துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் அறிமுகமானார். அவர் சிறுமுகை ரோட்டில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை பணம் கொடுத்தால் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை உண்மை என நம்பிய நாங்கள் 3 பேரும் ரூ.2 லட்சம் பணத்தை மகேந்திரனிடம் கொடுத்தோம். பின்னர் அவர் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறி மேட்டுப்பாளையம் தாசில்தார் கையொப்பம் மற்றும் சீலுடன் கூடிய ஆணையை எங்களிடம் வழங்கினார்.
அதனை நாங்கள் கொண்டு சென்று பார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. எனவே வீடு பெற்று தருவதாக கூறி எங்களிடம் ரூ.2 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தனர்.
புகாரின் பேரில் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
