மேலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அரசு ஊழியர் வெட்டிக்கொலை- கணவர் உள்பட 2 பேர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது62). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் கம்பவுண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் பணியின் போது தர்மஸ்தான பட்டியில் ராமன் வாடகைக்கு வீடு எடுத்தி தங்கியிருந்தார். அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜெயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ஜெயாவின் கணவர் கிருஷ்ணன் பழக்கத்தை கைவிடுமாறு ராமனை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்களது பழக்கம் நீடித்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுப்பையா, கண்ணன் ஆகியோர் ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று இரவு ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சீதாராமன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்