தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்- டிரைவர்கள் 2 பேர் கைது
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையை அடுத்த புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
குறிப்பாக காய்கறி, அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு தினமும் கேரளாவுக்கு லாரிகள் சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் ஒருசிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அங்கிருந்து இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி கொண்டு வந்து தென்காசி மாவட்டத்தில் காட்டு பகுதிகளில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.
இதனை தடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து புளியரை சோதனை சாவடியில் போலீசாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நேற்று செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து தென்காசிக்கு வந்த 2 கனரக லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் பிளாஸ்டிக் கழிவுகள், நெகிழி பைகளின் கழிவுகள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்டதும், அதனை தென்காசி மாவட்டத்தில் கொட்டி செல்வதற்கு முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நெல்லையில் இருந்து சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் ஜெபா தலைமையிலான குழுவினர் தென்காசிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ததில் அந்த கழிவுகள் மண் வளத்தை தரமிழக்க செய்வது என்பது தெரியவந்தது.
இதனால் லாரி டிரைவர்களான திருச்சி மாவட்டம் லால்குடி நடுத்தெருவை சேர்ந்த ஜான் பீட்டர்(33), கவுதம்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.