
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 311 மெட்ரிக் டன் வரையிலான நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.88.97 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் ஜன.1 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களால் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜன.1 முதல் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாடு தடை பற்றிய விழிப்புணர்வு மற்றும் பறிமுதல் செய்யும் பணியும், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி 17.06.2019 அன்று முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் (நெகிழி) சேமிப்பு மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கும் பணியும் பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் பெறப்பட்டு பல்வேறு பயன்பாட்டிற்கும், தார் சாலை அமைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களைப் பயன்படுத்த, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-143 முதல் 155 வரையுள்ள அனைத்து கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து மூன்று தனிக்குழுக்கள் அமைத்து, நொளம்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, குன்றத்தூர் பிரதான சாலை, மதுரவாயல் மற்றும் போரூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்பாடு குறித்து அனைத்து வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், சாலையோரக் கடைகள் ஆகியவற்றில் 05.12.2019 அன்று 155 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய 14 நிறுவனங்களுக்கு ரூ.15,800/- அபராதம் விதிக்கப்பட்டு, 9.5 கிலோ வரையிலான தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
மேலும், இந்த ஆய்வின் போது எண்.13/1, குன்றத்தூர் பிரதான சாலை, போரூரில் செயல்பட்டு வந்த சிட்டி ஸ்டைல் காலணி விற்பனை செய்யும் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி உரிமம் இல்லாத நிலையில் இக்கடை மாநகராட்சி அலுவலர்களால் மூடி முத்திரையிடப்பட்டது.
தமிழக அரசால் நெகிழிகள் பயன்பாடு தடை செய்யப்பட்ட ஜன.1 முதல் தற்பொழுது 05.12.2019 வரை வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 31,773 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய 1,420 நிறுவனங்களுக்கு ரூ.10,97,200/- அபராதம் விதிக்கப்பட்டு, 18 டன் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 01.01.2019 முதல் தற்பொழுது 05.12.2019 வரை 37,526 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.8.47 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, 60 டன் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் ஜன.01 முதல் 06.12.2019 வரை 3,60,151 வணிக நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட நெகிழிகள் சுமார் 311 மெட்ரிக் டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஜன.1 முதல் 06.12.2019 வரை தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய வணிக நிறுவனங்களிலிருந்து ரூ.88,97,600 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது”.