
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பெருமாள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் மணிகண்ட பெருமாளின் நட்பை மணிகண்டன் துண்டித்து கொண்டார். மணிகண்டபெருமாள் பலமுறை பேச முயன்றும் மணிகண்டன் அதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து மணிகண்டபெருமாள் அவரது சகோதரர் பாண்டியிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மணிகண்டனை சந்திப்பதற்காக வந்தனர். அப்போது மணிகண்ட பெருமாளிடம் ஏன் பேசுவதில்லை என மணிகண்டனிடம் பாண்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் மணிகண்டபெருமாள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டினர். இதில் அவருக்கு உச்சந்தலையில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டதால் மணிகண்டபெருமாளும், பாண்டியும் தப்பி சென்றனர். மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
