Police Recruitment

மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

மதுரையில் லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள் மீது வழக்கு- லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு காகித பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்னையில் இருந்து கடந்த 2021 செப்டம்பர் 9-ந் தேதி புறப்பட்டது. மதுரை பாண்டிகோவில் பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் வணிக வரித்துறை அதிகாரி சசிகலா மற்றும் கணேசன், பாலகுமார் ஆகியோர் சோதனைக்காக லாரியை நிறுத்தினர்.

அப்போது ஆவணங்களை பரிசோதித்த போது காகித பண்டல்களுக்கான இணைய வழி ஆவணங்களை செப்டம்பர் 13 என்ற தேதிக்கு பதிலாக, காகிதம் வாங்கிய தேதியான செப்டம்பர் 9-ந் தேதி என்று தவறுதலாகப் பதிவாகியுள்ளது. இதனால் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆவணங்களில் தேதி சரியாக குறிப்பிடாததால் அபராதம் விதிக்க வேண்டும், அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து லாரி டிரைவர் சரவணன், உரிமையாளர் நாராயண சாமியை தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்தார். ஆவணங்களில் தேதி தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், சரியான ஆவணங்களை அனுப்பி வைப்பதாகவும் லாரியை விடுவிக்குமாறும் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சத்தொகையை பாதியாக குறைத்து ரூ.10 ஆயிரம் தந்து விட்டால் லாரியை விடுவிப்பதாக கூறினர்.

இதில் லாரி டிரைவர் சரவணன் தன்னிடமுள்ள ரூ.5 ஆயிரத்தை தருவதாகவும் மீதித்தொகையை தூத்துக்குடி சென்று அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு வணிக வரி அதிகாரிகள் லாரியை விடுவித்தனர். இந்த நிலையில் லாரி டிரைவர் சரவணன், வணிக வரித்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பேரம் பேசியது, ரூ.5 ஆயிரம் கொடுத்தது உள்ளிட்ட அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்து உரிமையாளரிடம் அளித்திருந்தார்.

இதையடுத்து உரிமையாளர் கொடுத்த தகவலின்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் லாரி டிரைவர் சரவணனின் கைப்பேசியை பெற்று அதில் உள்ள பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பதிவுகள் உண்மை என்பது தெரிய வந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இது தொடர்பான அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மதுரை ஜெய்ஹிந்துபுரம் சரக மாநில வரி அலுவலராக பணிபுரியும் சசிகலா, மதுரை வணிக வரித்துறை அலுவலகத்தில் மாநில துணை வரி அலுவலராக பணிபுரியும் கணேசன், மாநில துணை வரி அலுவலர் பாலகுமார் ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.