
மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது30). இவருக்கு சொந்தமான மில் கட்டிடம் கொத்தங்குளத்தில் உள்ளது.
கடந்த சில வருடங்களாக மில் இயங்காமல் இருந்துள் ளது. இந்த நிலையில் உதயகுமாரும், அவரது நண்பர் சஞ்சய் பாபுவுடன் மில்லுக்கு சென்றார். அப்போது மில் வளாகத்தில் அமர்ந்து 7 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த உதயகுமாரும், சஞ்சய் பாபுவும் இங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதுபோன்று இங்கு வந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அதைக்கேட்ட அந்த வாலிபர்கள் கோபமாக அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் இருவரும் சேர்ந்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் 2 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் பெரிய வாளுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உதயகுமாரை நோக்கி வந்தார்.
அவர் உதய குமாரையும், சஞ்சய் பாபுவையும் வாளை திருப்பி வைத்து தாக்கினார். மேலும் இருவரையும் மிரட்டி உதயகுமார் வைத்தி ருந்த வைர மோதிரம், 3½ பவுன் தங்க செயின், வெள்ளி பிரைஸ்லெட், 2 மொபைல்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார்.
இது குறித்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
