
தொடர் திருட்டில் ஈடுபட்டு சிக்கிய வாலிபர்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 60). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த குடிநீர் மின் மோட்டார் திருடு போனது. இதேபோல் ராமையா தெருவில் உள்ள ராஜேந்திரன், சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டிலும் மின் மோட்டார், இன்வெட்டர் பேட்டரிகள் திருடு போனது. 3 கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 3 வீட்டிலும் திருடியது நேதாஜி தெரு, எம்.ஜி.ஆர். கிழக்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ராஜபாண்டி(30) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது39). இவர் எப்.எப்.ரோட்டில் நடந்து சென்றபோது 2 பேர் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ஷாஜகான் பணம் தர மறுத்து விட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிளேடால் கீறிவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோ, தெற்குவாசலை சேர்ந்த ராஜ்மோகன் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் ராஜ்மோகனை கைது செய்த போலீசார் இளங்கோவனை தேடி வருகின்றனர்.
