
மதுரையில் நான்கு மாசி வீதிகளில் இருசக்கர வாகனத்தை நிறுத்துதல் நெறிப்படுத்தும் வகையில் மஞ்சள் கோடு வரையும் பணியை காவல் ஆணையர் இன்று மாலை தொடக்கி வைத்தார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு வாகன நிறுத்தங்களை சீர்செய்ய நகரின் மையப் பகுதியான நான்கு மாசி வீதிகள் (சுமார் 4.6 கி.மீ சுற்றளவு), நான்கு ஆவணி மூல வீதிகள் (சுமார் 2.5 கி.மீ சுற்றளவு) ஆகிய சாலை பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களை நெறிபடுத்தி, அடையாளப்படுத்தும் விதமாக மஞ்சள் வர்ணத்தில் பெயிண்ட் பூச்சு மற்றம் மஞ்சள் நிறத்தில் கயிறு பதிக்கப்படுகிறது.
இதற்கான தொடக்கத்தை இன்று மாலை தெற்கு மாசி வீதி மற்றும் மேலமாசி வீதி சந்திக்கும் இடத்திலிருந்து மஞ்சள் கோடு வரையும் பணியை காவல் ஆணையர் லோகநாதன் தொடக்கிவைத்தார்.
உடன் போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார்,கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார்,உதவி ஆணையர்கள் மாரியப்பன், செல்வின், தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் மற்றும் தெற்குவாசல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முத்து பிரேம் சந்த், இதர பகுதி ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் கலந்து கொண்டனர்.
இதன் பின்பும் சாலையோரங்களில் நிறுத்தக்கூடாத பகுதிகளில் நிறுத்தப்படும் போக்குவரத்து விதிமீறும் வாகனங்களுக்கு மோட்டார் சட்டப்படி முதன் முறையாக ரூ.500/-, மறுமுறை மீண்டும் தவறு செய்யும் வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.1500/-ம், மீட்பு வாகனங்களின் உதவி கொண்டு மீட்கப்படும் வாகனங்களுக்கு கூடுதலான அபராதம் விதிக்கப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
