Police Department News

தனியார் நிறுவன அதிகாரி தவறவிட்ட ரூ.94 லட்சத்தை திருடிய வங்கி ஊழியர்

தனியார் நிறுவன அதிகாரி தவறவிட்ட ரூ.94 லட்சத்தை திருடிய வங்கி ஊழியர்

பெங்களூரு ஐ.டி.ஐ. லே-அவுட், 3-வது பிளாக் மஞ்சுநாத் நகரில் வசித்து வருபவர் பிரமோத். தனியார் நிறுவன அதிகாரி. இவர், புதிதாக ஒரு நிலம் வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை நிலத்தின் உரிமையாளரிடம் கொடுக்க ரூ.94 லட்சத்தை பிரமோத் வைத்திருந்தார். அந்த பணத்தை நிலத்தின் உரிமையாளரிடம் கொடுக்கும் முன்பாக கடந்த 6-ந் தேதி சந்திரா லே-அவுட்டில் உள்ள தன்னுடைய நண்பரின் கடைக்கு பிரமோத் சென்றிருந்தார்.

அங்கு வைத்து பிரமோத்தும், அவரது நண்பரும் பணத்தை எண்ணி உள்ளனர். அதன்பிறகு, நிலத்திற்கு உரிய சொத்து பத்திரங்கள் அடங்கிய ஆவணங்கள் மற்றும் பணம் இருந்த பையை எடுத்து கொண்டு வக்கீலை பார்க்க நண்பரின் கடையில் இருந்து பிரமோத் காரில் புறப்பட்டார். அப்போது காரில் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துவிட்டு, ரூ.94 லட்சம் இருந்த பையை காரின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரில் வைத்திருந்தார்.
ஆனால் பணப்பையை எடுக்காமல் மறந்து அவர், அங்கிருந்து புறப்பட்டு காரில் வக்கீல் அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கு சென்று பார்த்தபோது தான் ரூ.94 லட்சம் இருந்த பணப்பை இல்லாததை கண்டு பிரமோத் அதிர்ச்சி அடைந்தார். உடனே நண்பரின் கடைக்கு வந்து பார்த்த போது பணப்பை கிடைக்கவில்லை.

இதுபற்றி சந்திரா லே-அவுட் போலீசில் பிரமோத் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், ரூ.94 லட்சத்தை திருடி சென்றதாக ஸ்ரீநகரை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான வருண் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார் வாங்க திட்டம்
வருண் ஒரு தனியார் வங்கி கிரெடிட் கார்டு பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 6-ந் தேதி சந்திரா லே-அவுட்டுக்கு சென்றிருந்த போது தனது ஸ்கூட்டரில் ஒரு பை இருப்பதை கண்டுள்ளார். அந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியில் செய்வது அறியாமல் திகைத்த வருண், பணப்பையுடன் ஸ்கூட்டரை ஓட்டி சென்று விட்டார். ரூ.94 லட்சம் இருந்ததால், அதனை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று கடந்த 5 நாட்களாக வருண் திட்டமிட்டு வந்துள்ளார்.

மேலும் ஒரு சொகுசு கார் வாங்க அவர் முடிவு செய்துள்ளார். 5 நாட்களாக அந்த பணத்தில் எதுவும் வாங்காமல், 6-வது நாளில் தான் ரூ.5 ஆயிரத்தை எடுத்து வருண் செலவு செய்திருந்தார். கார் வாங்குவது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக வருண் போலீசாரிடம் சிக்கி இருந்தார். அவரிடம் இருந்து ரூ.94 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

300 கேமராக்கள் ஆய்வு
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், பிரமோத் என்பவர் தனது காரில் பணப்பையை வைப்பதற்கு பதிலாக மறதியில் காரின் அருகே நின்ற ஸ்கூட்டரில் வைத்துவிட்டு சென்றிருந்தார். தனது ஸ்கூட்டரில் பணம் இருப்பதை பார்த்த வருண் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார்.

அந்த பணத்தை வருண் போலீசாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் தனது ஸ்கூட்டரில் இருந்ததால் பணத்தை திருடி சென்றதாக வருண் கைது செய்யப்பட்டுள்ளார். வருணை பிடிக்க 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருணை பிடித்திருந்தனர்.விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், என்றார்.

Leave a Reply

Your email address will not be published.