
மதுரையில் ரூ.40 கோடி வரை வசூலித்த பிரபல நகைக் கடை மூடல்? – காவல் ஆணையரிடம் மோசடி புகார்
செய்கூலி, சேதாரம் இலவசம் என மதுரையில் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக பிரபல நடைக் கடைக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள நிலையூரைச் சேர்ந்தவர் கீர்த்திகா. இவர், மதுரை மாநகர காவல் ஆணையர் லோநாதனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மேலமாசி வீதியிலுள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைக்கு சில மாதத்துக்கு முன்பு சென்றேன். உரிமையாளர் பழைய நகையை டெபாசிட் செய்தால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடுதல் வட்டியுடன் புதிய நகை பெறலாம் என கூறினார். இதை நம்பி 2022 செப்டம்பர் 24-ல் 40 கிராம் நகை, டிசம்பர் 23-ல் 7.896 கிராம் நகையும் டெபாசிட் செய்தேன்.
இந்நிலையில், முதலில் டெபாசிட் செய்தநகைக்குஓராண்டுக்கு பின் 3 கிராம் தங்கக் காசுடன் புதிய நகையை பெற 2023 செப்.24-ல் கடைக்கு சென்றேன். கடையில் இருந்த ஊழியர்கள் ஒருவாரம் கழித்து வருமாறு கூறினர். ஒரு வாரத்துக்கு பிறகு சென்றாலும் புதிய நகையை வாங்க முடியவில்லை. அக்.12-ம் தேதி சென்றபோது, நகைக்கடை பூட்டியிருப்பது கண்டு அதிர்ந்தேன். மேலும், என்னை போன்று பலரிடம் பழைய நகை டெபாசிட் பெற்றும், நகைக்காக தவணை முறையில் பணம் வசூலித்தும் பல கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது. பிரணவ் நகைக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நகையை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பூட்டியிருந்த பிரணவ் நகைக்கடை முன்பு காலை திரண்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் சமாதனம் செய்து அனுப்பினர். இருப்பினும், அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டனர். வழக்கறிஞர் ஜெயா என்பவர் தலைமையில் காவல் ஆணையர் லோகநாதனிடம் 80-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். துணை ஆணையர் மங்களேசு வரன் மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கறிஞர் ஜெயா கூறுகையில், “தவணை முறையில் பணம் செலுத்துவோர், பழைய, புதிய நகை முதலீடு செய்வோருக்கு கூடுதல் வட்டியுடன் செய்கூலி, சேதாரம் இன்றி புதிய நகைகள் வழங்குவதாக ஆசைவார்த்தைகளை கூறி, ரூ.1 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 40 பேர் திலகர் திடல் காவல் நிலையத் தில் புகார் அளித்தபோது, நகைக்கடை உரிமையாளரே போலீஸ் தரப்பில் பேசி, முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்தார். திடீரென கடையை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை உட்ப 8 இடங்களில் செயல்பட்ட கிளைகளும் மூடப்பட்டுள்ளன. மதுரை கிளை மூலம் விருதுநகர், திருவில்லிபுத்துார், சிவகாசி, காரைக்குடி , சிவகங்கை போன்ற பகுதியில் இருந்து மட்டும் சுமார் ரூ.40 கோடிமேல் வசூலிக்கப் பட்டுள்ளது” என்றார்.
