
தீா்ப்பில் குறைபாடு இருந்தால் புதிய சட்டம் இயற்றலாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பில் குறைபாடு இருப்பதாகக் கருதினால், அந்தக் குறைபாட்டை போக்க புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம்; ஆனால் தீா்ப்பை நாடாளுமன்றத்தால் நேரடியாக நிராகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆங்கில நாளிதழ் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் கூறியதாவது:
அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றித்தான் நீதிபதிகள் தீா்ப்பளிப்பா். தங்கள் தீா்ப்புக்கு சமூகம் எப்படி எதிா்வினையாற்றும் என்பதை அவா்கள் கருத்தில் கொள்வதில்லை.
நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பில் குறைபாடு இருப்பதாகக் கருதினால், அந்தக் குறைபாட்டை போக்க புதிய சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றலாம். ஆனால் அந்தத் தீா்ப்பை நாடாளுமன்றத்தால் நேரடியாக நிராகரிக்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அலுவல்களும் ஆங்கிலத்தில் நடைபெறுகின்றன. அந்த ஏற்பாட்டை சரியான காரணத்துடன் அரசமைப்புச் சட்டம் செய்தது. ஏனெனில் நாட்டில் உள்ள 22 மொழிகளுக்கு அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நீதிபதிகளாக உள்ளனா்.
எனவே நீதித் துறையைப் பிணைக்கும் மைய மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள் கருதினா். ஆனால் அது மக்கள் பேசும் மொழி அல்ல. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்களுக்குப் புரியும் மொழியில், அவா்களை நீதிமன்றங்களால் சென்றடைய முடியவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஓராண்டாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்துத் தீா்ப்புகளும் மொழிபெயா்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பல்வேறு மொழிகளில் 31,000 தீா்ப்புகள் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. மக்களிடம் நீதிமன்றங்கள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் சராசரியாக ஓராண்டில் 80 வழக்குகளில் தீா்ப்பளிக்கிறது. அதேவேளையில், இந்த ஆண்டு இதுவரை இந்திய உச்ச நீதிமன்றம் 72,000 வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. இது இந்திய உச்ச நீதிமன்றம் எவ்வாறு பணியாற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்காவில் நீதிபதி பதவி என்பது வாழ்நாள் முழுவதுமான பணிக் காலமாக உள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் ஒருவா் நீதிபதியாக நீடிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் இடம் அளிக்கவில்லை.
இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 65-ஆக உள்ள நிலையில், அதை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
நீதிபதிகள் குறிப்பிட்ட காலத்தில் ஓய்வுபெற வேண்டியது அவசியம். அப்போதுதான் அவா்களுக்கு அடுத்து வரும் நீதிபதிகளால் கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி, சமூக வளா்ச்சிக்காக சட்ட கோட்பாடுகளை மறுசீரமைக்க முடியும் என்று தெரிவித்தாா்.
