
குற்றவாளியை கைது செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி கைது
சென்னையில் புகாருக்குள்ளான ஒருவரை கைது செய்யும்படி காவல்ஆணையருக்கே உத்தரவிட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி, சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையரின் (முகாம்) தொலைபேசிக்கு கடந்த 3-ம் தேதி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘‘எனது பெயர் வி.சி.சுக்லா.ஐஏஎஸ் அதிகாரியான நான், மத்திய நிதித் துறையில் கூடுதல் செயலாளராக உள்ளேன். தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் வழக்கு ஒன்று தொடர்பாக பேசினேன்.
அவர் உங்களிடம் பேசும்படி கூறினார். சென்னை மத்திய குற்றப்பிரிவில் தனியார் நிறுவனம் அளித்த புகார் ஒன்று உள்ளது. அந்தபுகாரில் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளியை கைது செய்யாமல் போலீஸார் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே,அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும்’’ என அதிகார தொணியில் பேசியுள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க மாங்காட்டை சேர்ந்த நாகசுப்பிரமணியன் (54) என்பவரை அனுப்பி வைப்பதாகவும் ஆங்கிலத்தில் பேசியுள்ளார். இந்த பேச்சு காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி என கூறி பேசியவரின் செல்போனை அடிப்படையாக வைத்து விசாரித்தனர். அப்போது, போனில் பேசியவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என தெரியவந்தது.
விளக்கம் அளிப்பதற்காக அவர்அனுப்பி வைப்பதாக கூறிய நாகசுப்பிரமணியன்தான், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கூறி காவல் ஆணையர் அலுவலக தொலைபேசியில் ஆள்மாறாட்டம் செய்து பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுற்றிவளைத்து போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் அன்புராஜ் என்பவரிடம் புகார் மனுவை பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நாகசுப்பிரமணியன், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொதுமேலாளராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
