
கம்பம்மெட்டு அருகே பண்ணையில் பதுக்கிய 400 லி. சாராய ஊறல், 17 லி. சாராயம் பறிமுதல்
கம்பம்மெட்டு எல்லை அருகே கேரள பகுதியில், வீடு மற்றும் பண்ணையில் பதுக்கியிருந்த 400 லிட்டர் சாராய ஊரல், 17 லிட்டர் சாராயத்தை கேரள கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக, கேரள எல்லையான கம்பம்மெட்டு அருகே ராஜகுமாரியில் ரகசியமாக சாராய விற்பனை நடைபெறுவதாக இடுக்கி கலால்துறை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது அறிவுறுத்தலின்படி, கலால் சிறப்புப்படை உதவி கலால் ஆய்வாளர் ஷாஜி ஜேம்ஸ் தலைமையில், கலால் ஆய்வாளர் தாமஸ் ஜான், தலைமை நிர்வாக அதிகாரி மரியா ஆல்பின், ஜஸ்டின் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ரகசிய விசாரணை நடத்தினர்.
அப்போது, ராஜாக்காடு கச்சிரபாலம் சஜீவன் என்பவர், சாரயம் காய்ச்சி ரிசார்ட்ஸ் மற்றும் பிற சிறு வியாபாரிகளிடம் மொத்த வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சஜீவன் தோட்டத்து வீட்டில் போலீசார் திடீர் சோதனையிட்டனர்.
அப்போது பண்ணைவீட்டு கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறல், 17 லிட்டர் சாராயம், சாராயம் காய்ச்சும் உபகரணங்கள் ஆகியவற்றை கலால் துறையினர் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை வஸ்துகளை உடும்பஞ்சோலை கலால் துறையினரிடம் ஒப்படைத்த போலீசார், கலால் குழுவிடம் இருந்து தப்பியோடி தலைமறைவான சஜீவன் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
மேலும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது ெசல்போன் முலம், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உண்டு என விசாரித்து வருகின்றனர்.
