மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணி வகுப்பு
மதுரை திருப்பரங்குன்றம் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக துணை ராணுவப் படை மற்றும் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகர காவல் துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. காலையில் மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பூங்கா சந்திப்பில் தொடங்கிய இந்த அணி வகுப்பு திருநகர் ஆறாவது நிறுத்தம் வரை நடைபெற்றது. இதில் துணை ராணுவத்தினர் போலீசார் அணி வகுத்து சென்றனர். இதேபோல் மாலை செல்லூர் சரகம் கோசா குளம் சி இ ஓ ஏ பள்ளியில் இருந்து தொடங்கி மீனாட்சிபுரம் வரை நடைபெற்றது. இதில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை இராணுவ படையினர், என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.