
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மாவட்டந்தோறும் இளைஞர்களை ஒன்று சேர்த்து, தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டமிட்டிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம், தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்துல் சமீமையும், தவுபீக்கையும் காவலில் எடுத்து விசாரிக்க, குழித்துறை நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை (20-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே இவர்கள் இருவரும் அல் ஹன்ட் என்ற அமைப்பை தொடங்கி, தென்னிந்தியாவில் அதற்கு ஆள் சேர்த்ததும், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் சதிச் செயலுக்கு பயிற்சி அளித்த தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
எஸ்.ஐ. சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக பெங்களூருவில் மெஹபூப் பாஷா என்பவரை, கர்நாடக போலீஸார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்துள்ளனர். அவர், அப்துல் சமீமுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மெஹபூப் பாஷா மற்றும் ஏற்கெனவே டெல்லி, பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம், கியூ பிரிவு போலீஸார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள், தமிழகம், கேரளம், கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் மாவட்டந்தோறும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அல் ஹன்ட் இயக்கத்தில் சேர்த்து, மூளைச்சலவை செய்து தீவிரவாத பயிற்சி அளிப்பதற்கு முயன்றுள்ளனர். வில்சன் கொலைத்திட்டத்தை நிறைவேற்ற ஆலோசனைகளையும் இவர்களே வழங்கியுள்ளனர்.
அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரின் நண்பர்கள், உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோரை பிடித்து, குமரி போலீஸார் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் இக்கொலைக்கு முன்னரும், பின்னரும் அப்துல் சமீம், தவுபீக் ஆகியோருக்கு உதவியவர்கள் பட்டியலை போலீஸார் தயார் செய்துள்ளனர். அவ்வாறு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோர் தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் 3 மாநில போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வில்சன் கொலை செய்யப்பட்டது போன்று வேறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் யாரையும் கொலை செய்யும் திட்டம் இவர்களுக்கு இருந்ததா? தென் மாநிலங்களில் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதி மேற்கொண்டார்களா? ஆகிய கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள இருவரையும் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்த பின்னர், கைது நடவடிக்கை வேகம் பிடிக்கும். இவர்கள் மேற்கொண்ட சதித்திட்டங்கள் குறித்த உண்மையும் வெளிவரும் என போலீஸார் தெரிவித்தனர்.