கொலை வழக்கில் 22 வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் கைது
திருவள்ளூர் அருகே சாகுல் அமீது என்ற கார் ஓட்டுனரை கொலை செய்து தலைமறைவாக இருந்தவர் 22 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஜான்சன், பாபு என்கின்ற குப்பன் ஆகியோர் சாகுல் அமீதின் காரில் சென்னையில் உள்ள திருவெற்றியூர் வந்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் காரை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு தனியாக சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் அதே காரில் திருவள்ளூரை அடுத்த பட்டறை பெருமந்தூர் வழியாகச் சென்று கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் காரில் இருந்தபடி தாங்கள் வழிப்பறியில் ஈடுபட்டது குறித்து பேசி கொண்டிருந்தனர், தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட கார் டிரைவர் சாகுல்அமீது தங்களை காவல் அதிகாரிகளிடம் மாட்டி விட்டு விடுவார் என்று அவர்கள் கார் டிரைவர் சாகுல் அமீதை கழுத்து நெறித்து கொலைசெய்து பட்டறை பெருமந்தூர் ஆற்றுப்பாலத்தில் வீசிவிட்டு தலைமறைவானது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
திருவள்ளூர் தாலுகா காவல் அதிகாரிகள், அவர்கள் மூன்று பேரை கைது செய்து திருவள்ளூர் JM -I நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் 1998 ஆம் ஆண்டு திருவள்ளூர் நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஜாமீனில் வெளியில் இருந்த ஜான்சன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜான்சன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தூத்துக்குடிக்கு சென்ற காவல்துறையினர். ஜான்சனை சுற்றிவளைத்து கைது செய்து திருவள்ளூர் JM -I நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.