
கரோனே வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பினால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு எஸ்பி எஸ்.சக்திகணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
”கரோனா தொற்றினைப் பொறுத்தவரை நாம் இரண்டாவது ஸ்டேஜில் இருந்து மூன்றாவது ஸ்டேஜ்க்கு செல்லாமல் இருக்கவே தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோபியை அடுத்த தூக்கநாயக்கன் பாளையம் பகுதியில் 24 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரப்பிய இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளைப் பரப்புவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா வைரஸ்க்கு மருந்து என்ற பெயரில் வரும் வாட்ஸ் ஆப் செய்திகளை யாரும், யாருக்கும் பரிந்துரைக்க வேண்டாம். அவ்வாறு குழப்பம் ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்ட நிர்வாகம் தரப்பில் மாவட்ட எல்லையை மூடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கலாம்” என்றார்.