Police Department News

பல இடங்களாக கஞ்சா வற்பனை செய்தவர்கள் தூத்துக்குடி காவல்துறையினரிடம் சிக்கினர்

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கார் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், ஆய்வாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் காரில் தூத்துக்குடி நோக்கி கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து உஷாரான காவல்துறையினர், தூத்துக்குடியில் இருந்து வெளியில் செல்லும் ரோடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். தூத்துக்குடி-திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக காவல்துறையினரிடம் பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காரை சோதனை செய்தனர். காரில் டிரைவர் இருக்கைக்கு பின்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. காரின் பின்பகுதியில் உள்ள டிக்கியில் 2 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

அந்த 3 மூட்டைகளையும் காவல்துறையினர் சோதனை செய்தனர். இதில் ஒரு மூட்டையில் 30 கிலோ காய்ந்த கஞ்சாவும், மற்றும் 2 மூட்டைகளில் தலா 40 கிலோ கஞ்சாவும் ஆக மொத்தம் 110 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிடிபட்ட இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நரசிப்பட்டினம் பெந்தம்புட்டேபள்ளியை சேர்ந்த வெங்கடேசுவர ராவ் மகன் ரத்தினகுமார்(வ33), செட்டிப்பள்ளியை சேர்ந்த ரமணன் மகன் சாய்குமார்(22) என்பது தெரிய வந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்து உள்ளனர்.

தற்போது கேரளாவுக்கு கொண்டு செல்வதற்காக 110 கிலோ கஞ்சாவுடன் 2 பேரும் காரில் மதுரைக்கு வந்தனர். அங்கிருந்து நெல்லைக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகம் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனால் கடத்தல்காரர்கள் தூத்துக்குடிக்கு வந்து, அங்கிருந்து கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி தூத்துக்குடிக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்தனர். அங்கிருந்து நெல்லைக்கு செல்வதற்கு பதிலாக வழிதவறி திருச்செந்தூர் ரோட்டில் சென்று விட்டார்களாம். அப்போது, போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் இருவரும் சிக்கிக்கொண்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த ரத்தினகுமார், சாய்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கார் மற்றும் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான இருவரையும் நேற்று காலை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.