
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோருக்கான கரோனாபரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல், சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மற்றும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான புதிய நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:
ஒரு குழுவாக அல்லது தனிநபராகதமிழகத்துக்கு வருவோர், குறிப்பிடப்பட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலோ, ரயில் நிலையங்களிலோ சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களை அருகில் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்த வேண்டும். ‘நெகட்டிவ்’ என பரிசோதனை முடிவு வந்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்பி 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
ஒருவேளை நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அதிக ஆபத்துக்கு உரியவர்களாக இருந்தால் அரசின் தனிமைப்படுத்துதலில் வைக்க வேண்டும். அவர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனை யில் அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் தமிழகம் வருவதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டவர்கள், தமிழகம் வரும்போது அவர்களது முழுமையான விவரங்களை பதிவு செய்தபின் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு கரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை செய்யப்பட வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பு அளிக்கலாம்.
அறிகுறி தென்படும் அனைவரும், பரிசோதனை முடிவு வரும் வரைஅரசின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஒருவருக்கு அறிகுறி இல்லாத பட்சத்தில் 28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட வேண்டும். அதேநேரம், அவர்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட அபாய பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் அரசின் கண்காணிப்பில் வைத்துமருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.