ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் வீட்டில் இருந்து மாயமானார்.
உடனடியாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சபரிநாதன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாயமான பள்ளி மாணவியை சென்னை மாநகர பகுதிகளில் தேடினார்கள். அப்போது இரவு நேரத்தில் வடபழனி பகுதியில் தனியாக நின்ற மாணவியை மீட்டனர்.
விசாரணையில், கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் தன்னை, தனது பெற்றோர் வீட்டு வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்தியதால் மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறினார். அவரது பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.
மாணவி மாயமானதாக புகார் அளித்த 3 மணிநேரத்தில் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.
