தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரூ.390 கோடி மதிப்பிலான புதிய பாலங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 82 திட்டங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 3 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
அரியலூரில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படும். பெரம்பலூர், சின்ன முட்லூ பகுதியில் தடுப்பணைக்கு பதில் நீர்த்தேக்கம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம்- அரியலூர் மேலராமநல்லூரை இணைக்க ரூ.56 கோடியில் கொள்ளிடம் ஆற்றில் மேம்பாலம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணையின் பழுதான ஷட்டர்கள் ரூ.24 கோடியில் புதுப்பிக்கப்படும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், திருவாரூர் மற்றும் கொரடாச்சேரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் குறுக்கே மாடக்குளத்தில் ரூ.17 கோடியில் படுகை அணை கட்டப்படும். வைகை ஆற்றின் குறுக்கில் மண்ணாடிமங்கலம் – இரும்படியை இணைக்க ரூ.18 கோடியில் மேம்பாலம் கட்டப்படும். நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் ஜன்மத்துக்கு உட்பட்ட நிலங்களை தீர்வு செய்வதற்கான எஞ்சிய பணிகளை விரைவில் முடிக்க, 3 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவில் நீலகிரியில் ஏற்கெனவே பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், வன அதிகாரி ஒருவர், வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் இடம் பெறுவர். குமரி மாவட்ட கடலோரங்களில் ஏற்படும் கடலரிப்பு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளுக்காக புதுப்பேட்டை, புனித தோமையர் மலையில் விளையாட்டுப் பள்ளிகளுடன் கூடிய குழந்தைகள் காப்பகங்கள் ரூ.ஒன்றரை கோடியில் அமைக்கப்படும். சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தலைமையகத்தில் ரூ.6 கோடியில் நவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
புதிய விருதுகள்
விபத்துகளை தவிர்ப்பதில் சிறப்பாக செயல்படும் 3 மாவட்டங்கள் மற்றும் ஒரு மாநகரத்துக்கு ஆண்டுதோறும் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் விபத்து குறைப்புக்கான சிறந்த மாவட்டம் மற்றும் சிறந்த நகரத்துக்கான விருது’ வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் 3 காவல் நிலையங்களுக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பை’ வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார். இதன்மூலம் ரூ.389 கோடியே 91 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 82 புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்கள் பி.பொன்னையா – காஞ்சிபுரம், எல்.சுப்பிரமணியன் – விழுப்புரம், ரோகிணி.ரா.பாஜிபாகரே – சேலம் ஆகியோருக்கு முதல்வர் கேடயங்களை வழங்கினார்.
இதேபோல் சிறந்த மாநகராட்சிக்காக
காவல் கண்காணிப்பாளர்கள் அபினவ்குமார்- அரியலூர், என்.ஸ்ரீநாதா- கன்னியாகுமரி, டி.ஜெயச்சந்திரன்- சிவகங்கை ஆகியோருக்கும் துறைகள் அடிப்படையில், சென்னை குடிநீர் வாரியத்துக்காக நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர்சிங், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர்- முகமது நசிமுத்தின், தொழிலாளர் நல ஆணையர்- கா.பாலச்சந்திரன் ஆகியோருக்கும் முதல்வர் கேடயம் வழங்கினார்.
வேளாண்துறையில் பிரதமர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திய எல்.நிர்மல்ராஜ்-திருவாரூர், தேசிய விவசாய பொருட்கள் எலக்ட்ரானிக் சந்தைப்படுத்துதலுக்காக எஸ்.பிரபாகர்- ஈரோடு மற்றும் பிரதமர் காப்பீட்டு திட்டத்துக்காக எல்.சுப்பிரமணியன்- விழுப்புரம் ஆகிய ஆட்சியர்களும் பாராட்டுக்களை பெற்றனர்.