இது சத்தியம்….. தேவையற்ற பயணம் கிடையாது.. – வாகன ஓட்டிகள் தந்த உறுதிமொழி படிவம்…!
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர் பகுதியில் உள்ள புதிய பஸ் ஸ்டேண்டு, நேதாஜி சிலை சந்திப்பு, சித்தூர்கேட், நெல்லூர்பேட்டை ஏரிக்கரை, உள்ளி கூட்டு ரோடு, பரதராமி, சைனகுண்டா, பத்திரபல்லி உள்ளிட்ட பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணித்தும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும்வருகின்றனர்.இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. ஸ்ரீதரன் அறிவுறுத்தலின்பேரில், நேதாஜி சிலை சந்திப்பில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் உள்ளிட்ட போலீஸார் 27.5.2021 அன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், தேவையின்றி சுற்றித் திரிந்த 37 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன ஓட்டிகளிடம் ஆவணங்கள் சரியாக உள்ளதா என முதலில் ஆய்வுசெய்தனர். பின்னர், ‘தேவையின்றி வெளியே சுற்றித் திரிய மாட்டேன் – இது சத்தியம்’ என்று போலீசார் அளித்த உறுதிமொழி படிவத்தில் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் அவர்களிடம் வாகனங்களை ஒப்படைத்தனர் காவல்துறையினர்.கடந்த மே 26ஆம் தேதி மட்டும் 29 பேர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட நிலையில், 2வது நாளாகவும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதேபோல் தேவையின்றி சுற்றித் திரிவோரைப் பிடித்து நேதாஜி சிலையைச் சுற்றி வரச் செய்தல், திருக்குறள் வாசித்தல், யோகா பயிற்சி, உடல்பயிற்சி, உறுதிமொழி ஏற்பு, ஒற்றைக் காலில் தவம் போன்ற பல்வேறு நூதன முறையிலான விழிப்புணர்வு நடவடிக்கையால் தேவையின்றி சுற்றித் திரிவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.