தமிழகத்தின் பல பகுதிகளில், 15 நாட்களில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 15 ஆயிரத்து, 537 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.
காவல் துறையின், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர், சாராய ஊறல் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தலுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து அப்பிரிவு போலீசார், ‘ஆப்பரேஷன் விண்ட்’ என பெயரிட்டு, அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 15 நாட்களில், விழுப்புரம் மாவட்டத்தில், 1,400; கள்ளக்குறிச்சி மாவட்டம், தாழச்சேரியில், 1,200; புதுக்கோட்டை மாவட்டம், கருக்காகுறிச்சியில், 5,360 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர்.
திருவண்ணாமலையில், 4,103; சேலத்தில், 850; வேலுாரில், 600; ராணிப்பேட்டை மற்றும் சில இடங்களில், 15 ஆயிரத்து, 537 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.மேலும், 2,988 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 16 ஆயிரத்து, 524 மதுபாட்டில்கள், சட்ட விரோதமாக விற்கப்பட்ட, 1,115 மதுபாட்டில்களையும்பறிமுதல் செய்துள்ளனர். சாராய ஊறல் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தல் தொடர்பாக, 571 வழக்குகள் பதிந்து, 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






